தஞ்சாவூர், மார்ச். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் புது சேத்தி பகுதியில் தனியார் கார் ஷோ ரூம் உள்ளது. அதில் கடந்த 22 ம் தேதி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய கார் ஒன்றை வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு பிள்ளையார் பட்டி ரவுண்டானா வரை வந்துள்ளார்.

இந்நிலையில் காரில் போதுமான அளவு பெட்ரோல் இல்லாததால் நடுவழியிலேயே கார் நின்று விட்டது. சாலை நடுவில் கார் நிற்பதை கண்ட பொதுமக்கள் அதுக் குறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அத்தகவலறிந்து அச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வல்லம் போலீசார் காரில் இருந்த அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் காவல்துறையினரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் காருடன் சேர்த்து அந்த வாலிபரையும் வல்லம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு போலீசார் அந்த வாலிபரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் அவர் கும்பகோணம் மொட்ட கோபுரம் மூர்த்தி செட்டித்தெருவை சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மகன் ஹரி பிரசாத் (31) என்பதும்  வல்லம் புதுசேத்தியில் தனியார் கார் ஷோ ரூமில் இருந்து அந்த காரை திருடி வந்ததும், பெட்ரோல் தீர்ந்ததால் சாலையிலேயே நிறுத்தி வைத்ததும் தெரிய வந்தது.

மேலும் அதுக்குறித்து கார் ஷோ ரூம் நிறுவன மேலாளர் பத்மநாபன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹரி பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட காரின் மதிப்பு ரூ. 10 லட்சம் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here