சோழவரம், ஜூலை. 04 –

சோழவரம் அருகே பத்தாண்டுகளாக சிதிலமடைந்து சீரமைக்கப்படாத நிலையில் சாலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் அப்பகுதில் புதிய சாலை அமைத்துதர வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட அப்பகுதி கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள கொல்கத்தா நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்துள்ள அத்திப்பேடு கிராமத்தில் பிரதான சாலைக்கு வரும் ஒன்றிய சாலை சுமார் 10 வருடங்களாக குண்டும் குழியுமாக சேதமடைந்த நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், அத்தியாவசிய பணிக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், அவசர தேவைக்குக் கூட ஆம்புலன்ஸ் வாகனம் இப்பகுதிக்கு வரமுடியாத சூழ்நிலை உள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினைக் குறித்து, பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை என மேலும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், பொறுமையிழந்த அத்திப்பேடு கிராம மக்கள் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சோழவரம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 10 ஆண்டுகளாக சேதமடைந்துள்ள சாலையை சீரமைப்பதாக அதிகாரிகள் உத்தரவாதம் தந்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என கிராம மக்கள் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சேதமடைந்துள்ள சாலையை இரண்டு மாத காலத்திற்குள் முறையாக சீரமைத்து தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here