கும்பகோணம், ஏப். 17 –
கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்கா, ஆடுதுறையில் உள்ள கஞ்சான் மேட்டுத்தெருவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோயில் இப்பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது,
மேலும், இத்தலத்தின் 94 வது ஆண்டு திருநடன திருவிழா கடந்த 27 ஆம் தேதி திங்கட்கிழமையன்று காப்பு கட்டுதலுடன் இவ்வாண்டிற்கான விழா தொடங்கியது.
மேலும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, காளியம்மன் திருநடனம் கடந்த 04 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் ஏப்ரல் 08 ஆம் தேதி சனிக்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, மதுரகாளியம்மன் திருநடனத்துடன் பவனி வரும் வீதிகளில், ஒவ்வொரு குடும்பத்தினரும், மாவிளக்கு ஏற்றிவைத்து, தட்டில் பழங்கள், தேங்காய் மலர்சரங்கள், எலும்பிச்சம் பழம், மங்கல பொருட்களான வளையல் தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றுடன் மதுர காளியம்மனை தண்ணீர் நிரப்பிய சொம்பில் வேப்பிலை சொருகி வைத்து, அதன் பாதங்களை குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்வித்தும், தங்கள் வீடுகளுக்குள் வரவேற்றனர்.
அந்நிகழ்வினைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அம்பாள் ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழாவும், அதனையடுத்து, முக்கிய நிகழ்ச்சியான 1008 பால்குடம் வீதிவுலா நிகழ்ச்சிக்காக கடந்த சனிக்கிழமையன்று, வீரசோழ ஆற்றங்கரையிலிருந்து 1008 பால்குடங்களை குழந்தைகள் முதல் முதியவர் வரை இருபாலினத்தவரும் தலையில் சுமந்தப்படி அவ்வூரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக, வந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் அலகுக்காவடி எடுத்து வந்தனர், இந்நிகழ்வின் போது ஒவ்வொரு வீதிகளிலும் ஏராளமானவர்கள் காத்திருந்து, தீபாராதனை செய்து வழிபட்டனர்.
மேலும், இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து மதுரகாளியம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது. மேலும் தொடர்ந்து, தயிர் பள்ளயம் இடப்பட்டு பக்தர்களுக்கு அன்னபிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் வெகு சிறப்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும், அத்திருக்கோவில் நாட்டாமை, நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மற்றும் விழாக் கமிட்டியினர் பொதுமக்கள் என அவரவரவரின் தகுதிக்கேற்ற வகையில் தங்கள் பங்களிப்பை உள்ளார்ந்த ஈடுபாடுடன் செய்திருந்தனர்.