கும்பகோணம், செப். 12 –
கும்பகோணம் மாநகர பகுதியான மேலக்காவேரியில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான சோழர்கால ஆலயமாகும்.
இந்நிலையில் இவ்வாலயம் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்திருந்த நிலையில் அறநிலையத்துறையினரின் துரித நடவடிக்கையால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருப்பணிகள் நிறைவுற்று கடந்த 10ம் தேதி விநாயகர் பூஜையுடன் யாகசாலை தொடங்கப்பட்டு. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகாபூர்ணாஹுதி நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விமான கலசத்திற்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்ற மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. 200 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றதால் சுற்று வட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



















