காஞ்சிபுரம், ஆக. 22 –
காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் விரைவில் அமையவுள்ள நிலையில், பரந்தூரை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகபடுத்தவும், குடியிருப்புகளை அகற்றவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் அருகே ஏகனாபுரம் பகுதி கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடி ஏந்தி பேரணியாக சென்று கண்டன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தொடர்ச்சியாக அவர்கள் ஏகனாபுரம் பேருந்து நிலையம் அருகே சாலை ஓரமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏகனாபுரம் கிராத்தில் உள்ள ஏரிகளை அழித்து ஏர்போர்ட் அமைக்க வேண்டுமா ? விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்க வேண்டுமா ? வேண்டாம்., வேண்டாம்.. விமான நிலையம் ! என்ற வாசகங்கள் எழுதியுள்ள பதாதைகளுடன் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல தலைமுறைகளாக விவசாயம் செய்து இயற்கையான முறையில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை அழித்து விமான நிலையம் அமைக்க எடுக்கும் நடவடிக்கை என்பது, மிகவும் வேதனை அளிப்பதாகவும், மத்திய மாநில அரசுகள் மக்கள் பாதிக்காதபடி விமான நிலையம் அமைக்க வேண்டும் விமான நிலையம் அமைப்பதை நாங்கள் வரவேற்கின்றோம். அதே நேரத்தில் குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்ற மத்திய மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம் என்றவாறு முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் பெண்கள் சிலர் கண்ணீருடன் ஒப்பாரி வைத்தபடி போராட்டத்தில் பங்கேற்றனர்.