கும்பகோணம், ஜன. 24 –
கச்சதீவை மீட்டு, தமிழர் உரிமையை நிலைநாட்ட, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வாயிலாக, கச்சத்தீயில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கும்பகோணத்தில் இன்று இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில், தடையை மீறி, தேசிய கொடி, மீன்பிடி வலை மற்றும் பொம்மை துப்பாக்கியுடன் நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
1976ம் ஆண்டு இந்திராகாந்தி ஆட்சி காலத்தில், கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்த்து. இதனை தற்போதைய இந்திய அரசு ரத்து செய்து, கச்சத்தீவை மீட்டு, தமிழர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சி ஆட்சியாக இருந்தாலும், தமிழர்கள் மீதான தாக்குதல்கள், அவர்களது படகுகளை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. எனவே இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும், கச்சத்தீவை மீட்கும் வகையில், வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று, கச்சத்தீவில், தமிழக அரசு, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மூலம் இந்திய தேசியக்கொடியை ஏற்றிடச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில், போலீசார் போராட்டத்திற்கு அனுமதிக்காத நிலையில், தடையை மீறி, கும்பகோணம் பக்தபுரித்தெரு ரவுண்டனாவில் தேசிய கொடி, மீன்பிடி வலை மற்றும் பொம்மை துப்பாக்கியுடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து, இக்கோரிக்கை மனுவினை பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கும் அனுப்பிடும் வகையில் கும்பகோணம் கோட்டாட்சியரிடம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடதக்கது





















