சென்னை, ஜன. 5 –
போலீஸ் என்று தன்னைக்கூறி ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான வாட்ச்சை கடையிலிருந்து நூதன முறையில் திருடிச் சென்ற போலி போலீஸை திருவான்மியூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கை கடிகாரத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் உள்ள சத்யா டைம்ஸ் என்ற வாட்ச் கடை உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு இந்த கடைக்கு வந்த நபர் தான் காவல் உதவியாளர் என அறிமுகம் செய்து கொண்டு அக்கடையில் இருக்கும் வாட்ச் மாடல்களை பார்க்க ஆரம்பித்துள்ளார்.
சிறிது நேரத்தில் 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு வாட்ச்களை வாங்கிவுள்ளார். கடை ஊழியர்கள் பணம் கேட்டதற்கு அருகில் எனது வீடு உள்ளது பணம் எடுத்து வரவில்லை என்னுடன் ஒருவரை அனுப்புங்கள் பணம் எடுத்து தருகிறேன் எனக் கூறியுள்ளார்.
22 ஆயிரம் மதிப்பிலான வாட்ச் என்பதால் அவருடன் இருசக்கர வாகனத்தில் கடை ஊழியர் ஒருவரை அனுப்பி வைத்துள்ளனர். போலி போலீஸ் இந்திராநகர் அருகே சென்ற போது திடீரென கடை ஊழியரை இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கும்படி கூறியுள்ளார். கீழே இறங்கியதும் அந்த போலி போலீஸ் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றுள்ளார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து கடை உரிமையாளர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சென்னை வடபழனி, பகவன் காலனியை சேர்ந்த சிவா(40) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் சிவாவை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவர் சிவகுமார் மற்றும் ஜோஸ்வா என்ற பெயரில் எஸ்.ஐ. சீருடை அணிந்து பல்வேறு வணிக வளாகங்களில் பொருட்களை ஏமாற்றியதும், போலீஸ் என கூறி டிபார்ட்மெண்ட் கடைகளில் மளிகை பொருட்கள், செல்போன் கடைகளில் செல்போன் போன்றவற்றை மோசடி செய்துள்ளதும் இவர் மீது அசோக்நகர், வடபழனி, சங்கர்நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் எந்த ஒரு கடைக்கும் செல்வதற்கு முன்பு சிவா தனது செல்போனில் பதிவேற்றம் செய்து வைத்திருக்கும் வாக்கி டாக்கி சத்தம் கேட்கும் வகையில் ஆடியோவை ஆன் செய்துவிட்டு உள்ளே சென்றதும் இவர் போலீஸ் என கூறியதும் கடையில் இருப்பவர்கள் நம்பி விடுவார்களாம். பின்னர் போலி காவல் உதவி ஆய்வாளர் சிவா(எ) சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து நூதன மோசடியில் ஈடுபட்டு எடுத்துச்சென்ற 22 ஆயிரம் மதிப்பிலான வாட்ச்சை போலீசார் பறிமுதல் செய்தனர்.






















