சென்னை, டிச. 29 –
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக 200 மீ. நீளத்திற்கு தற்காலிக பாதையை பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன் பாட்டிற்காக தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதை திறப்பிற்கான நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. அதனை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஆண்டு தோறும் டிசம்பர் 3 ஆம் நாள் உலக மாற்றுத் திறனாளிகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினரால் அனுசரிக்கப்பட்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப் படையில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை தொடர்ந்து பெருநகர சென்னை மாநாகராட்சியின் சார்பில் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை கண்டுகளிக்க வசதியாக தற்காலிக பாதை அமைத்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி தேனாம் பேட்டை மண்டலத்தில் உள்ள மெரினா கடற்கரைக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகளில் எளிதாக கடற்கரைக்கு சென்று கடலலைகளை கண்டு களிக்க வசதியாக கடற்கரை அணுகு சாலையில் இருந்து கடற்கரை வரையில் உள்ள சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு மரப்பலகையால் ஆன தற்காலிக பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வரும் மாற்றத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு வசதியாக மணற் பரப்பில் இயங்க கூடிய 5 எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள் பெருநகரசென்னை மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் ஓய்வெடுக்க சாமியான பந்தலும் அவர்களுக்கு குடிநீர் மற்றும் சிற்றுண்டி வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு வசதிகளை நேற்று முதல் எதிர் வரும் ஜன 3 -2022 வரையிலான 3 தினங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் கோரிக்கையை ஏற்று வருகின்ற ஜன 16-2022 வரை மாற்றுத் திறனாளிக்கான இந்த சிறப்பு தற்காலிக பாதையினை நீட்டிப்பு செய்ய பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு அரசு முதன்மை செயலாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர்( பணிகள் ) எம்.எஸ்.பிரசாந்த், தலைமைப் பொறியாளர் ( பொது ) எஸ். ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.




















