கும்பகோணம், நவ. 17 –
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ரவிளிப்பிரியா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் காவல்துறை ஆய்வாளர் ஓம்பிரகாஷ் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர் பேசுகையில் தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை கஞ்சாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் மூலம் கஞ்சா சப்ளை செய்வதாக கூறப்படுவது. ஆனால் இது தொடர்பாக இதுவரை புகார் எதுவும் வர இல்லை. அது குறித்து விசாரிக்கப்படும். கஞ்சா விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாவது தடுக்கப்பட வேண்டும்.
பந்தநல்லுார் அருகே வேட்டமங்கலம் மற்றும் காமாட்சிபுரம் பகுதிகளில் ஏற்பட்ட பதட்டம் ஆட்டோ டிரைவர் பிரபாகரன் கொலையை தொடர்ந்து நடந்தது. இது சமுதாய மோதலாக சொல்ல முடியாது. அந்த வழக்கில் உரிய விசாரணை நடக்கிறது. அதே போல் திருவைகாவூரில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக வரும் வாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அங்கும் இயல்பு நிலை திரும்ப மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
பந்தநல்லுார், நாச்சியார்கோவில் காவல் நிலையங்களில் பழைய கட்டடங்களை இடிக்க அனுமதி கேட்டுள்ளோம். புதிய கட்டடம் கட்ட இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. புதிதாக தொடங்கப்பட்டுள்ள சோழபுரம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கேட்டுள்ளோம். காவல் நிலையங்களில் காலி பணியிடங்கள் இல்லாத வகையில் பணியிடம் நிரப்பப்படுகிறது. கும்பகோணத்தில் நடந்த இளைஞர் கொலை சம்பவத்தில் விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து காவல் நிலையம் வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.