திருவாரூர், மே. 13 –
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தேரோடும் தெற்கு வீதியின் பெயர் மாற்றத்தை கண்டித்து பாஜக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
மனுநீதிச்சோழன் வாழ்ந்து அரசாட்சி புரிந்த திருவாரூர் நகரில் தெற்கு வீதிக்கு மனுநீதி சோழன் பெயரை வைக்க வேண்டும். மத்திய அரசு 150க்கும் மேற்பட்ட திட்டங்களை மாநிலங்களில் செயல்படுத்துகிறது. ஆனால் அதற்கு பொதுவான பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது, தவிர நரேந்திர மோடி பெயரை வைக்கவில்லை.
உலக அளவில் அனைவருக்கும் வழிகாட்டும் அரசாக மத்திய அரசு உள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் மாநில அரசு புறக்கணிக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளியிடம், அரசு ஊழியர் லஞ்சம் கேட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்படி ஏதோ ஒரு வகையில் மத்திய அரசு திட்டங்களை புறக்கணிக்க வேண்டும் என்று அரசு செயல்படுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயரை சூட்ட தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்தால் பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரிய அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டங்களை தினந்தோறும் நடத்தும் என அண்ணாமலை பேசினார்.